Published : 22 Sep 2019 03:42 PM
Last Updated : 22 Sep 2019 03:42 PM

கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி

பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் போர் விமானங்கள் வர உள்ள நிலையில், கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இறுதியாகலாம் என்று இந்தியப் பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் போர் விமானம் இந்திய விமானப் படை அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானத்துக்கு ஆர்பி-01 என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 8-ம் தேதி பிரான்ஸ் செல்லும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ரஃபேல் போர் விமானம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

இதற்கிடையே கூடுதலாக 32 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய விமானப் படையின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு அதிக நவீனத்துவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் கொண்ட ரஃபேல் விமானங்கள் எண்ணிக்கையை 72 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை சென்று தாக்குதல் நடத்தி திரும்பியது. இந்தத் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களின் விமானப்படையின் பலத்தை அதிகப்படுத்த அதிகமான கவனத்தைச் செலுத்துகின்றன.

பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அமெரிக்காவின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய பின் அந்த விமானத்துக்குரிய மதிப்பு குறைந்துவிட்டது. இதனால், அமெரிக்காவிடம் இருந்து லாக்கீட் மார்டின் ஜெட்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

எப்-16 ரக போர் விமானத்தைக் காட்டிலும் எப்-21 ரக விமானம் அதிநவீனமானது என்றாலும் கூட இந்தியா அதை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக, போயிங் எப்-18 ரக விமானங்களை அதிகமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த வகை விமானம் வீரர்களையும் ஏற்றிச் செல்லும். போரிலும் ஈடுபடும். ரஃபேல் விமானத்தோடு எப்-18 விமானம் குறித்தும் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்

அதேபோன்று எஸ்ஏஏபி கிரிப்பன-இ, ரஷ்யாவின் மிக்-35, சுகோய் சு -35 ஆகியவை பழமையாகவும், ரஃபேல் விமானத்தோடு ஒப்பிடுகையில் அதன் தரம், தொழில்நுட்பம் மிகவும் மோசமாகவும் இருக்கிறது.

இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து 18 சு-30எம்கேஐ, 21 மிக் ரக போர் விமானங்களை வாங்க இருக்கிறது. மேலும், இந்தியாவிடம் இருக்கும் 272 சு-30 எம்கேஐ விமானங்களைத் தரம் உயர்த்தவும் ஆய்வு செய்து வருகிறது. சமீபத்தில் இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இதுதொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x