

புதுடெல்லி
சமையலில் பிரதானமாக இருக்கும் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரிகள் இருப்பு வைப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விரைவில் கொண்டுவர உள்ளது.
பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், " உள்நாட்டில் பெரிய வெங்காயம் மக்களுக்குத் தடையின்றிக் கிடைக்க கடந்த சிலவாரங்களாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், விலை உயராமல் இருக்க தடுப்பு நடவடிககைகளையும் எடுத்து வருகிறது. ஆனால், சில்லறை விலையில் மட்டும் திடீரென கடந்த 3 நாட்களாக உயர்வு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மழையால் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
தற்போது பல்வேறு இடங்களில் இருப்பில் வைக்கப்பட்டு இருந்த பெரிய வெங்காயம் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது. கரீப் பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வெங்காயம் நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு வரும். பல்வேறு இடங்களில் வெங்காயம் இருப்பு இருந்தாலும், மழை காரணமாக வெங்காயத்தைக் கொண்டு செல்ல முடியாத சூழல் இருக்கிறது என்று வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்
மகாராஷ்டிராவின் லசால்கான் மொத்தச் சந்தையில் கடந்த வாரம் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை உயராமல் தடுக்கும் வகையில் அரசு கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை நாபெட் மற்றும் என்சிசிஎப் மூலம் விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மதர் டெய்ரி விற்பனைக்கூடம் மூலம் கிலோ ரூ.23 க்கு விற்பனை செய்ய உள்ளது.
மத்திய அரசிடம் தற்போது 56 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் இருப்பு இருக்கிறது. இதில் 16 டன் வெங்காயம் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. டெல்லிக்கு மட்டும் 200 டன் வெங்காயம் நாள்தோறும் காலியாகிறது.
தொடர்ந்து வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால், வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடுவதைத் தடுக்க விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அதிகரித்தும், ஏற்றுமதி சலுகையை குறைத்தும் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெங்காய ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் அதிக அளவு விற்பனைக்க வரும், விலை குறைய வாய்ப்பு இருக்கும்.
பிடிஐ