

கொல்கத்தா
சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைமறைவாக இருக்கும் ராஜீவ் குமாரைத் தேடி, பல்வேறு சிறு குழுக்களை சிபிஐ அமைத்துள்ளது. அவரைக் கைது செய்ய நீதிமன்றம் தடையில்லை என்று தெரிவித்துவிட்டதால், தீவிரத் தேடுதலில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்
மேற்கு வங்க மக்களிடம் ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்ட சாரதா சிட்பண்ட் நிறுவனம் மோசடி குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஆனால், விசாரணை முறையாக நடக்காததால், கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிஐடி கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.
இந்த வழக்கை விசாரித்த வந்தபோது ஏராளமான ஆவணங்களை அழித்துவிட்டதாகவும், ஆவணங்களை முறையாக ஒப்படைக்கவில்லை என்றும் சிபிஐ குற்றம் சாட்டி ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றது.
ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து கைது செய்யத் தடை ஆணை பெற்றிருந்தார் ராஜீவ் குமார் . ஆனால், ராஜீவ் குமாரைக் கைது செய்யத் தடையில்லை என்று கடந்த 10 நாட்களுக்கு முன் கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு தெரிவித்தது.
சிபிஐ அதிகாரிகள் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் இன்னும் ஆஜராகவில்லை. இதற்கிடையே ராஜீவ் குமாரைக் கைது செய்ய வாரண்ட் கேட்டு அலிப்போர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.
ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ராஜீவ் குமாரைக் கைது செய்யத் தடையில்லை என்று அறிவித்த நிலையில் அவருக்கு வாரண்ட் ஏதும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அலிப்பூர் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சார்பில் முன்ஜாமீ்ன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று மாவட்ட நீதிபதி, சுபர்தா முகர்ஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் குமார் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக மட்டுமே ராஜீவ் குமார் இருந்தார். ஆனால், ஊழலில் ஒருபோதும் ஈடுபடவில்லை. ஆனால், சிபிஐ அவரை ஊழல் செய்ததாகச் சேர்த்துள்ளது. தற்போது சிஐடி துறையின் கூடுதல் இயக்குநராக இருக்கும் அவரைத் தப்பி ஓடியவர் என்று சிபிஐ கூறுவதை ஏற்க முடியாது. அவரைக் காவலில் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடுகையில், " பலமுறை ராஜீவ் குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் கோரினோம். ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சட்டத்தை மீறியே நடக்கிறார். அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதை கடுமையாக எதிர்க்கிறோம். விசாரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், உச்ச நீதிமன்றம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்க வலியுறுத்தி இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என வலியுறுத்தினர்.
இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுபர்தா பானர்ஜி, ராஜீவ் குமார் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதற்கிடையே ராஜீவ் குமாரைக் கண்டுபிடிப்பதற்காக சிபிஐ சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் சனிக்கிழமை உத்தரப் பிரதேச பவன், தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
ராஜீவ் குமாரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரின் மனைவியிடம் விசாரனை நடத்தினார்கள். மேலும், சவுத் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
ஐஏஎன்எஸ்