Published : 22 Sep 2019 01:12 PM
Last Updated : 22 Sep 2019 01:12 PM

விமானத்தில் இடி தாக்கியதால் சேதம்: தகவல் தெரிவிக்காத பைலட்களிடம் விசாரணை

புதுடெல்லி,

சில தினங்களுக்கு முன் டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருக்கும்போதே கடுமையான இடி தாக்கியதால் விமானத்தின் சில பாகங்கள் சேதம் அடைந்தன. சில பயணிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டதாக ஏர் இந்தியா வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதுகுறித்து தகவல்களை உரிய விதிமுறைகளின்படி தெரிவிக்கப்படவில்லை என்றும் ஏர் இந்தியா உயரதிகாரிகளுக்கு மிகவும் காலதாமதமாகத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏர் இந்தியா உயரதிகாரி ஒருவர் இன்று கூறியதாவது:

சில தினங்களுக்குமுன் இரவு 7.30 மணியளவில் ஏஐ467 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியிலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்படும்போதே மோசமான வானிலை இருந்தது. எனினும் இந்த விமானம் இரவு 9.40க்கு விஜயவாடாவுக்குச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், உரிய நேரத்தில் சென்றடையாமல் இடி, மின்னல், மழை காரணமாக மிகவும் தாமதமாகச் சென்றடைந்ததாகவும் இடையில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானில் பறந்துகொண்டிருந்தபோதே இடி தாக்கியதால் விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு, சேதம், பயணிகளுக்கு சிறு காயம் | படம்: ஏன்என்ஐ

மோசமான வானிலையில் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்தின் சில உட்பாகங்கள் சேதமடைந்ததுள்ளன. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், செப்டம்பர் 17 அன்று நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட இந்த ஏர் இந்தியா விமானப் பணியாளர் குழு விதிமுறைகளின்படி விமானப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். காலதாமதமாக இத்தகவல் ஏர் இந்தியா உயரதிகாரிகளுக்குக் கிட்டியுள்ளது.

அபாயத்தை எதிர்கொண்ட இந்தச் சம்பவம் குறித்து சம்பவம் நடந்தபோதே விமானப் பாதுகாப்புத் துறைக்கு ஏன் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து பைலட்களிடமும் அந்த விமானத்தின் மற்ற பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏர் இந்தியா உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல இன்னொரு சம்பவமும் அதேநாளில் நடந்துள்ளது. ஏர்பஸ் 321 விமானத்தில் ஏ.ஐ. 048 என்ற விமானம் டெல்லியில் இருந்து கொச்சினுக்குச் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலையை எதிர்கொண்டது. அப்போது கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் வேகமாக இயக்குவதில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால், விமானி உடனடியாக இந்தச் சம்பவத்தை விமானப் பாதுகாப்புத் துறைக்கு தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் விமானத்தின் சில பணியாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். மற்றபடி விமானத்திற்கு சேதமோ, பயணிகளுக்குப் பெரிய அளவில் காயங்களோ ஏற்படவில்லை.

கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நான்கு மணி நேரத்திற்குப் பிறகே விமானம் மீண்டும் டெல்லி புறப்பட்டது.

"இரண்டு நிகழ்வுகளிலும், விசாரணை நடந்து வருகிறது. விமானப் பாதுகாப்புத் துறையின் முழுமையான சோதனைக்குப் பிறகு விமானம் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x