

புதுடெல்லி
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறும்போது, “மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜக அரசு இப்போது உணர்ந்துள்ளது. முதலாளிகளால் உருவாக் கப்பட்ட இப்போதைய அரசு அவர்களுக்காகவே செயல்படு கிறது. எனவே, இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்” என்றார்.
கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் பவன் கெரா நேற்று கூறும்போது, “மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த 2 மாநிலங்களுடன் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக அரசு கூறி வருகிறது.
எனினும், நடைபெறவுள்ள 2 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தொடரும் விவசாயிகள் தற்கொலை, ஆளும் கட்சியினர் மீதான ஊழல் புகார்கள், 15 லட்சம் பேர் வேலையிழந்தது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவோம்” என்றார். - பிடிஐ