Published : 21 Sep 2019 05:45 PM
Last Updated : 21 Sep 2019 05:45 PM

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்

அமராவதி, பிடிஐ

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான என்.சிவபிரசாத் சிறுநீரக பாதிப்பினால் சனிக்கிழமையன்று காலமானார். இவருக்கு வயது 68.

இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் சில காலங்களாக அவதிப்பட்டு வந்தார், இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திருப்பதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வியாழனன்று சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் சனிக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்.

வெள்ளிக்கிழமையன்று தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சிவபிரசாத்தைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து சென்றார்.

சிவபிரசாத் சித்தூ லோக்சபா தொகுதியில் இருமுறை தேர்வு செய்யப்பட்டவர். சந்திரபாபு அமைச்சரவையில் தகவல் மற்றும் பொது உறவுகள் துறையின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

ஆந்திராவை பிரிப்பதை எதிர்த்து பல்வேறு வேடங்களில் இவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்திய போராட்டங்கள் பிரபலமானவை. அதே போல் பிரிவுக்குப் பிறகு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும் போராடியதில் முக்கியப் பங்கு வகித்தவர் சிவபிரசாத்.

பயிற்சி பெற்ற மருத்துவரான சிவபிரசாத்தின் குணச்சித்திரம் தனிப்பட்டது, இவருக்கு நடிப்பு மீது பெரிய காதல் இருந்ததால் மேடை நாடக நடிகராகவும் திகழ்ந்தார். பிறகு தெலுங்குத் திரைப்படங்களில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துமிருக்கிறார். சிறந்த வில்லனுக்கான நந்தி விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தன் இரங்கலில் கூறும்போது, “என் நெருங்கிய நண்பரை இழந்தேன். ஆந்திர மாநில உரிமைகளுக்காக ஓய்வின்றி பாடுபட்டவர் சிவபிரசாத். இவரது மறைவு சித்தூர் மாவட்டத்துக்கு மட்டுமல்ல ஆந்திர மாநிலத்துக்கே பேரிழப்பு” என்றார்.

ஒரே வாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி இரண்டு மூத்த தலைவர்களை இழந்து விட்டது, முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத ராவ் சமீபத்தில் காலமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x