

புதுடெல்லி,
காஷ்மீருக்குச் சென்று அங்கு மிர்வாய்ஸ் உமர் பாரூக் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தலைவர்களைச் சந்திக்க அனுமதி அளிக்குமாறு காஷ்மீரி பண்டிட்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காஷ்மீர் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் காஷ்மீரி பண்டிட்கள் அங்கு சென்று காஷ்மீரின் முக்கிய தலைவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அனுமதி அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் காஷ்மீர் பண்டிட் சதீஷ் மகால்தர் மற்றும் அவரது குழுவினர் கூறியதாவது:
''எங்கள் மதிப்பிற்குரிய மற்றும் அன்பான பிரதமரின் விருப்பத்திற்கு இணங்க, ஒரு பின்தொடர் நடவடிக்கையாக காஷ்மீர் பண்டிதர்களின் தூதுக்குழு காஷ்மீருக்குச் செல்ல விரும்புகிறது. அங்கு மிர்வாய்ஸ் உமர் பாரூக் போன்ற மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தலைவர்களைச் சந்திக்க விரும்புகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வேறுபட்ட சமூகங்களுக்கு இடையேயான ஒரு இணக்கமான உறவை உருவாக்குவதற்கான முதல் சாதகமான படியாக இது இருக்கும்.
காஷ்மீர் மதத் தலைவர்களையும் அரசியல் தலைவர்களை சென்று நாங்கள் சந்திப்பதன் மூலம் அங்கு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். மேலும் சமூகங்களுக்கிடையேயான ஏற்பட்டுள்ள வன்முறை அல்லது போரின் அச்சத்தை அகற்றவும் இந்த சந்திப்பு உதவும்.
சமூகங்களுக்கு இடையிலான ஒரு பொறுப்புமிக்க மற்றும் இணக்கமான உறவு ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயம் அங்கு அமைதியான சூழ்நிலையை மேம்படுத்த முடியும். இதை நாங்கள் அவர்களுடன் சென்று பேசுவதன்மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இத்தகைய எங்கள் நல்ல முயற்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ஐஏஎன்எஸ்