Published : 21 Sep 2019 04:24 PM
Last Updated : 21 Sep 2019 04:24 PM

கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது: 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேவகவுடா முடிவு

பெங்களூரு

கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஏறக்குறைய முடிந்துவிட்டதாகத் தெரிகிறது, அக்டோபர் மாதம் நடக்கும் இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் தனித்து நிற்க ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடா முடிவு செய்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தேர்தலில் எதிர் துருவங்களாக இருந்த தேவகவுடா தலைமையிலான ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் கட்சி.

ஆட்சியை ஜேடிஎஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்த காங்கிரஸ் கட்சி முதல்வராக ஹெச்டி குமாரசாமியை அமர்த்தியது. ஆனால், 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால், கடந்த ஜூலை மாதம் போர்க்கொடி தூக்கிய 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜக உதவியுடன் மும்பையில் சொகுசு ஓட்டலில் தங்கினர். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் குமாரசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழந்தது.

ஆனால், சபாநாயகர் ரமேஷ் குமார் 15 எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை கடைசி வரை ஏற்கவில்லை. கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவை 15 எம்எல்ஏக்களும் மதிக்காததால், அவர்களின் பதவியை செல்லாததாக அறிவித்து, 15 தொகுதிகளும் காலியானதாக அறிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்எல்ஏக்களும் சபாநாயகர் ரமேஷ் குமார் பிறப்பித்த உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் கிடப்பில் இருக்கிறது.

இந்த சூழலில் கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இதன்படி, கோகக், அத்தானி, ராணிபென்னூர், காக்வாட், ஹிரேகேர்குர், எல்லப்பூர், யஷ்வந்த்பூர், விஜயநகரா, சிவாஜிநகர், ஹோசேகோட், ஹுன்சுர், கிருஷ்ணராஜபேட், மகாலட்சுமி லேஅவுட், கேஆர் புரா, சிக்காபல்லாபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஆனால், ராஜேஸ்வரி நகர், மாஸ்கி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இடைத்தேர்தலை தனித்தே ஜேடிஎஸ் சந்திக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஹெச்டி தேவகவுடா அறிவித்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ், ஜேடியு கூட்டணி முறிந்துவிட்டது.

இதுதொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், " மாநிலத்தில் நடைபெறவுள்ள 15 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைக்கவில்லை. ஜேடிஎஸ் கட்சி தேர்தலைத் தனித்தே சந்திக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்தபோது எங்களின் வாக்குகளை பாஜகவிடம்தான் இழந்தோம். கூட்டணி அமைத்தது போதும். வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ எங்கள் கட்சி நிலைப்பாடு என்பது தனித்து நிற்பதுதான்" எனத் தெரிவித்தார்

மைசூரு நகரில் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் , காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பீர்களா எனக் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் " ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் தேவகவுடா ஏற்கெனவே 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கிவிட்டார். ஜேடிஎஸ் தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை அறிவிப்போம்.

எங்கள் நோக்கம் 8 முதல் 10 இடங்களை வெல்வது. அறத்துக்கு மாறாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது கவிழும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x