Published : 21 Sep 2019 03:47 PM
Last Updated : 21 Sep 2019 03:47 PM

கேரளாவில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத் தேர்தல்

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் வட்டியூர்காவு, எர்ணாகுளம், கொன்னி, அரூர் மற்றும் மஞ்சீஸ்வரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியி்ட்டது. அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் 3 எம்எல்ஏக்களான வட்டியூர்காவு எம்எல்ஏ கே.முரளீதரன், எர்ணாகுளம் எம்எல்ஏ ஹிபி எடன், கொன்னி தொகுதி எம்எல்ஏ அடூர் பிரகாஷ் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகினர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.ஆரிப் எம்.பி.யானார்.

மஞ்சீஸ்வரம் தொகுதி எம்எல்ஏவும், முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரசாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதால், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் வடகரா எம்.பி.யாக முரளிதரனும், எர்ணாகுளம் எம்.பி.யாக ஈடனும், அட்டிங்கல் எம்.பியாக பிரகாஷும், ஆழப்புழா தொகுதி எம்.பி.யாக ஆரிஃபும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளை வென்றதால் மிகுந்த உற்சாகத்துடன் இடைத் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேசமயம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மக்களவைத் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து திட்டமிட்டு தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளது. இரு கட்சிகளும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவும் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை விரைவில் அந்தக் கட்சியும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 தொகுதிகளிலும் பிரதானமாக காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிக்குத்தான் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x