Published : 21 Sep 2019 03:21 PM
Last Updated : 21 Sep 2019 03:21 PM

நான் சாம்னா படிப்பதில்லை; பாஜக-சிவசேனா இணைந்து தேர்தலைச் சந்திக்கும்: தேவேந்திர பட்நாவிஸ் பேட்டி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் : படம் ஏஎன்ஐ

மும்பை

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்தே தேர்தலைச் சந்திக்கும். அதில் மாற்றமில்லை. 2-வது முறையாக முதல்வராக நான் வருவேன் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக் காலம் நவம்பர் 7-ம் தேதி முடிவதையடுத்து தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால், சிவசேனா, பாஜகவுக்கு இடையே தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. சிவசேனா கட்சித் தரப்பில் தலா 135 தொகுதிகளில் பாஜகவும் நாங்களும் போட்டியிடுவோம், மற்ற தொகுதிகளை இதர கூட்டணிக்கு வழங்குவோம் என்று தெரிவிக்கிறது. ஆனால், பாஜக அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

தொகுதிகளைப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இழுபறி நீடித்தாலும், இரண்டொரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் மும்பையில் இந்தியா டுடே சார்பில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு அவர் பேட்டி அளி்த்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா, பாஜக இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலைச் சந்திக்கும். சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் 2-வது முறையாக நான் முதல்வராக வருவேன். எங்களுக்குள் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன். தொகுதிகளைப் பிரிப்பதில் பேச்சு நடந்து வருகிறது. மற்ற வகையில் வதந்திகளை நம்பத் தேவையில்லை.

தொகுதி பிரிப்பதில் பல்வேறு ஊகக் கருத்துகள் வெளியாகின்றன. ஆனால், இரு கட்சிகளுக்கம் உடன்பாடு ஏற்பட்ட பின், முறைப்படி ஊடகங்களில் அறிவிப்போம்".

இவ்வாறு தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.

சிவசேனா கட்சி தங்களின் அதிகாரபூர்வ நாளாடேன சாம்னாவில் உங்கள் அரசைப் பற்றி தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பட்நாவிஸ் கூறுகையில், " நான் சாம்னா பத்திரிகையைப் படிப்பதில்லை. அரசில் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அமைச்சரவை ஒப்புதலுடன், சிவசேனா அமைச்சர்கள் சம்மதத்துடனும்தான் எடுக்கப்படுகிறது. தன்னிச்சையாக முடிவு எடுக்கவில்லை.

எங்கள் 5 ஆண்டு ஆட்சி குறித்து எந்த சிவசேனா கட்சி அமைச்சருக்கும் 2-வது கருத்து இருக்கவில்லை. வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை" எனத் தெரிவி்த்தார்

நீங்கள் 2-வது முறையாக முதல்வராக வருவீர்களா என்று பட்நாவிஸிடம் நிருபர் கேட்டபோது, " அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? நிச்சயம் நான் 2-வது முறையாக முதல்வராக வருவேன். பாஜக- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெறும். 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x