Published : 21 Sep 2019 02:52 PM
Last Updated : 21 Sep 2019 02:52 PM

பாஜகவுக்கு எதிராக முக்கியப் பிரச்சினைகளை சட்டப்பேரவை தேர்தல்களில் முன்னிறுத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி

வரவிருக்கும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பாஜகவிற்கு எதிராகப் பல முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை மற்றும் போக்குவரத்து மீறலின் அபராதம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

இன்று ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்விரண்டு மாநிலங்களும் விவசாய முக்கியத்துவம் பெற்றவை.

இங்குள்ள ஆட்சியை பாஜகவிடம் இருந்து பறிக்க வேண்டி காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் காங்கிரஸை பிரச்சாரத்துக்காக உற்சாகப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை மற்றும் புதிய போக்குவரத்து சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கடும் அபராதம் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் முயல்கிறது.
இத்துடன் சில முக்கிய அறிவிப்புகளும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''நாட்டின் இன்றைய பொருளாதார மோசமான நிலையால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து ராகுலும், பிரியங்காவும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

வரும் தேர்தலில் வேலையில்லா இளைஞர்களுக்காக நாம் திட்டமிடும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெற்றியை தேடித்தரும்'' எனத் தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்தித்திருந்தது. இதில், அக்கட்சிக்கு பஞ்சாப், சத்தீஸ்கரில் மாபெரும் வெற்றியும், ம.பி. மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. இதற்கு அம்மாநில இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் காங்கிரஸ் அறிவித்த சில தேர்தல் வாக்குறுதிகள் முக்கியக் காரணமாகின.

எனினும், மக்களவைத் தேர்தல் பாதிப்பினால் தன் பதவியையே ராகுல் ராஜினாமா செய்யும் அளவிற்கு காங்கிரஸின் நிலை மோசமானது. இதில் மாற்றம் ஏற்படும் வகையில் காங்கிரஸின் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் கிடைத்து வருகிறது.

தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கட்சிக்கான ரூ.26 கோடியில் இருந்து மிக அதிகமாக நடப்பு வருடத்தில் உயர்ந்து ரூ.146 கோடியாகி உள்ளது. இதில் டாடா குழுமம் சார்பில் அதிக தொகையாக ரூ.5 கோடி காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.

புரூடன்ட் எலக்ட்ரோல் டிரஸ்டால் ரூ.39 கோடியும் நிதியாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் பாஜகவிற்கு ரூ.144 கோடி அளித்த புரூடன்ட் காங்கிரஸுக்கு வெறும் ரூ.10 கோடி அளித்திருந்தது.

இதுபோன்ற மாற்றங்களால் இந்திய பெருநிறுவனத் தொழில் அதிபர்களும் தமக்கு ஆதரவாக திரும்பத் தொடங்கி இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. இந்த சூழலை வைத்து வரும் தேர்தல்களில் வெற்றி தனது கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் எனவும் காங்கிரஸ் நம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x