Published : 21 Sep 2019 02:13 PM
Last Updated : 21 Sep 2019 02:13 PM

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல்: அச்சத்தில் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள்

காஷ்மீரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியிருப்பதால் எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 2003-ல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, சர்வதே எல்லையில் தாக்குதல் நடத்துவதில்லை என இந்தியா - பாகிஸ்தான் ஒப்புக்கொண்டன.

ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த அத்துமீறல் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு ஒட்டிய ஷாபூர், கேர்ணி செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணியளவில் அத்துமீறலில் ஈடுபட்டது.

முன்னதாக நேற்றிரவு பூஞ்ச் மாவட்டத்தின் மேந்தார் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பாலாகோட் செக்டார் பகுதியில் நள்ளிரவு 12.05 மணி முதல் 1.50 மணி வரை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.

அதேபோல், நவ்ஷேரா செக்டாரில் நேற்றிரவு 8 மணி முதல் 10 மணிவரை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கல்ஷியான் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வீடுகள் சேதமடைந்ததோடு, கால்நடைகளும் இறந்தன.

இதனால், எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் இன்று காலை ஜம்மு - காஷ்மீர் போலீஸார் கல்ஷியான் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது வீடுகளில் குண்டுகள் பாய்ந்து சேதமடைந்திருந்ததை அப்பகுதிவாசிகள் காட்டி தங்களின் அச்சத்தைத் தெரிவித்தனர்.

கடந்த வார சனிக்கிழமையன்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை கிராமங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில், கிராமத்துக்குள் விழுந்த பீரங்கி குண்டு ஒன்றை ராணுவத்தினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி ஆளில்லா பகுதியில் வெடிக்கச் செய்தனர்.

குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைக்கும் பாகிஸ்தானின் போக்கு எல்லையோர கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x