Published : 21 Sep 2019 12:53 PM
Last Updated : 21 Sep 2019 12:53 PM

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் அக்.21-ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஊடகங்களுக்கு பேட்டிஅளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி,

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 9-ம் தேதியுடனும், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 2-ம் தேதியுடனும் முடிகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். நீண்டகாலத்துக்குப் பின் தேவேந்திர பட்நாவிஸ் 5ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் தொகுதி உடன்பாட்டில் பிரச்சினை நீடித்ததால் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன.

கடந்த தேர்தலில் சிவசேனா 63 இடங்களையும், பாஜக 122 இடங்களையும் வென்றன. மற்ற கட்சிகளின் ஆதரவுடனும், சிவசேனா வெளியில் இருந்து அளித்த ஆதரவால் பாஜக ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

ஹரியாணா மாநிலத்தில் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இவரும் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இரு மாநிலங்களிலும் தேர்தல் நடக்கும் தேதி குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 7-ம் தேதியும், ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியும் முடிகிறது. மகாராஷ்டிராவில் 8.9 கோடி வாக்காளர்களும், ஹரியாணாவில் 1.28 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 21-ம் தேதியும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும நடைபெறும். அக்டோபர் 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள், வேட்புமனு பரிசீலனை 5-ம் தேதியும், அக்டோபர் 7-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும். இந்த தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வரும் 23-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செய்ய 30-ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 3-ம் தேதி மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இதுதவிர அருணாச்சலப்பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மேகாலயா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழகம், தெலங்கனா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும்.

இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கை வரும் 23-ம் தேதியும், வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசித் தேதி செப்டம்பர் 30-ம் தேதியாகும். வேட்புமனு மீதான பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதியும, வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதியாகும்.

மகாராஷ்டிராவில் இரு தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம். தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் சார்பி்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் இருக்கும் இடங்களான கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நேரத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்''.

இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x