Published : 21 Sep 2019 12:16 PM
Last Updated : 21 Sep 2019 12:16 PM

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய செய்தித் தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநாத் நியமனம் 

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) புதிய செய்தித் தொடர்பாளராக முன்னாள் பத்திரிகையாளர் சுப்ரியா ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளதாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது மாற்றங்கள் நடந்து வருகின்றன. கட்சிக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியை ஒப்புக்கொண்டு ராகுல் காந்தி தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாக அப்பதவி காலியிடமாகவே இருந்தது.

காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே, சச்சின் பைலட், ஜோதிராத்திய சிந்தியா உள்ளிட்டோர் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், ஆகஸ்ட் 11 அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி மீண்டும் நியமிக்கப்பட்டார். கட்சிக்குப் புதிய தலைவர் பொறுப்பேற்று ஒருமாதம் கடந்த நிலையில் தற்போது அகில இந்திய அளவிலான காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவிக்கு சுப்ரியா ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் கட்சியின் தகவல் தொடர்புப் பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''அகில இந்திய காங்கிரஸ் குழுவின் புதிய செய்தித் தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னாள் பத்திரிகையாளரான சுப்ரியா ஸ்ரீநாத், 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கனி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி, இதழியலில் நன்கு அறியப்பட்ட முகம், சுப்ரியா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேனல்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். டைம்ஸ் தொலைக்காட்சி நெட்வொர்க்கின் வணிக சேனல் ஒன்றிற்கு நிர்வாக ஆசிரியராக இருந்துள்ளார். அதற்கு முன்பு, அவர் என்டிடிவியில் உதவி ஆசிரியராக இருந்தார்.

லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் பழைய மாணவியான சுப்ரியா ஸ்ரீநாத் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் தனது பள்ளிப்படிப்பை லக்னோவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட்டில் பயின்றார். சுப்ரியா ஸ்ரீநாத் லக்னோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x