Published : 21 Sep 2019 12:04 PM
Last Updated : 21 Sep 2019 12:04 PM

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை: அடுத்த வாரம் முதல் விவசாயிகள் நேரடியாக 'கிசான் போர்டலில்' பதிவு செய்யலாம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறும் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் அடுத்த வாரத்தில் இருந்து மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த போர்டலில் கணக்கு தொடங்கும் விவசாயிகள் தங்களுக்குப் பணம் வந்துவிட்டதா என்றும் பரிசோதிக்க முடியும்.

நாடு முழுவதும் உள்ள குறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி்த்தொகை அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பாக அறிவித்துச் செயல்படுத்தினார். இதன்படி ஏராளமான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் உதவித்தொகையைப் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை ரூ.6 ஆயிரம் என்பது 3 தவணைகளாகப் பிரித்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.87 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் சித்தி (பிஎம்கேஎஸ்எஸ்) திட்டத்துக்கான போர்டல் அடுத்த வாரம் தயாராகிவிடும், அதில் விவசாயிகள் நேரடியாக தங்களை ஆதார் எண் மூலம் பதிவு செய்ய முடியும் என்று வேளாண் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடக்கத்தில் இந்தத் திட்டத்தில் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் அதாவது 2 ஹெக்டேர் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று கூறப்பட்டது. அதன்பின் நாடு முழுவதும் உள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வேளாண்துறை இணைச் செயலாளர் விவேக் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் தற்போது 3 பிரிவுகளாகப் பணியாற்றி வருகிறோம். முதலில் பதிவு செய்யாமல் இருக்கும் விவசாயிகளை இந்தத் திட்டத்தில் அனுமதித்து, சுயமாக தங்களைப் பதிவு செய்யச் சொல்வது.

இரண்டாவது ஆதார் மூலம் பதிவு செய்து, அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை அவர்களைச் சரி செய்து கொள்வது. மூன்றாவதாக அரசு அனுப்பும் பணம் வந்து சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வது. இந்தப் புதிய வசதிகள் அனைத்தும் போர்டலில் அடுத்த வாரம் முதல் செயல்படத் தொடங்கும். அதாவது 23-ம் தேதிகூட இயங்கலாம்.

முதல்கட்டமாக 6.55 லட்சம் விவசாயிகளுக்கு 2-வது தவணையை வழங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி கோடி" என விவேக் அகர்வால் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x