

நொய்டா
கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இலவச மின்சாரம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் டெல்லி கிசான் கட் நோக்கி பேரணியைத் தொடங்கினர்.
உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் நீண்ட காலமாகவே கரும்பு நிலுவைத் தொகையை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்துகின்றனர்.
நொய்டாவின் செக்டார் 69 பகுதியிலிருந்து பேரணியைத் தொடங்கிய அவர்கள் டெல்லி கிசான் கா பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர்.
பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர், "எந்த அரசியல்வாதியும் எங்கள் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை. எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.
விவசாயிகள் பேரணியை ஒட்டி பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரணி நடைபெறும் வழிநெடுகிலும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி - காசியாபூர் எல்லை வழியாக தேசிய நெடுஞ்சாலை 24 வாயிலாக விவசாயிகள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பேரணி குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் பூரண் சிங் கூறும்போது, "விவசாய அமைச்சக அதிகாரிகளுடனான எங்களின் பேச்சு தோல்வியடைந்ததையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்க இந்தப் பேரணியை நடத்துகிறோம்" என்றார்.
பேரணியைத் தொடர்ந்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.
-ஏஎன்ஐ