

இஸ்லாமிய மத அறிஞர்களை உருவாக்குவதற்கு பதிலாக தாலிபான்களை தான் மதரஸாக்கள் உருவாக்குவதாக சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், "தற்போது செயல்படும் பெரும்பாலான மதரஸாக்கள் முஸ்லிம் இனவாதத்தை பரப்பும் தொழிற்சாலையாகவே இயங்குகின்றன.
அங்கு படிப்பவர்கள் தாலிபான்களாகவே வெளியேறுகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களாக யாரும் அங்கிருந்து உருவாகவில்லை. பழைய இனவாத முஸ்லிம் சுமையை தூக்கி வீசிவிட்டு, நவீனமயமாக்கலில் மதரஸாக்களை இறங்க வேண்டும்.
அவர்களது பள்ளிவாசல்களில் அறிவியல், கணக்கு ஆகியவற்றை கற்பிக்கப்படுவதில்லை. போதனை செய்யும் பள்ளிகள் தரம் குறைந்த மத திணிப்பில் ஈடுபடக்கூடாது.
அனைத்து பாடத் திட்டங்களையும் உள்ளடக்கினால் மட்டுமே சாதாரன முஸ்லிம் மக்களும் கல்வி அறிவு பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
உலக மக்கள் மேம்பட்டுக்கொண்டே போகும் போது, முஸ்லிம் மக்கள் மட்டும் அவர்களது மத நம்பிக்கையால் கல்வியறிவின்மையால் பின் தங்கி இருக்கக் கூடாது. அவர்கள் மத அடிப்படைத் தன்மையை கடந்து வர வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டது.
பள்ளிகள் பட்டியலிலிருந்து மதரஸாக்களை நீக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டு வருகிறது. மதரஸாக்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் மகாராஷ்டிர அரசின் முடிவுக்கு எதிர்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்து வரும் நிலையில் அரசின் யோசனைக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் இந்த தலையங்கம் சிவசேனாவில் வெளியிடப்பட்டுள்ளது.