7 நாட்கள் பயணம்: அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லியில் இருந்து நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ
புதுடெல்லியில் இருந்து நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

புதுடெல்லி

ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் மாநாடு, ஐ.நா. சபை பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ஹூஸ்டன் நகரில் நாளை நடக்கும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப்புடன் ஒரே மேடையில் தோன்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின் நியூயார்க்கில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு வர்த்தக உறவுகள், நிலுவையில் உள்ள பிரச்சினைகள், உறவுகளை மேம்படுத்தும் விஷயங்கள் குறித்துப் பேசப்படும் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டில் ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்.பி.க்களும் வருகை தர உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை நடக்காத அளவுக்கு இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியாக இது அமையலாம்.

அதிபர் ட்ரம்ப்புடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், "அதிபர் ட்ரம்ப்புடனான என்னுடைய சந்திப்பு இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஏராளமான நலன்களை விளைவிக்கும். நம்முடைய தேசிய வளர்ச்சிக்கு அமெரிக்கா மிகப்பெரிய கூட்டாளி நாடு. இரு தரப்பும் தங்களின் மதிப்புமிக்க விஷயங்களையும், நலன் சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து நட்புறவை வலுப்படுத்துவோம். மிகப்பெரிய ஜனநாயக நாடும், பழமையான ஜனநாயக நாடும் இயற்கையான நண்பர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி உரையாற்றுகிறார். நியூயார்க் பயணத்தில் பிரதமர் மோடி 20 கூட்டங்களில் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனத் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.
அதன்பின் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா ஐ.நா.வில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரேஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்

பிரதமர் மோடி இந்தியாவில் ஸ்வச் பாரத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக, அவருக்கு பில்கேட்ஸ் அமைப்பு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

நியூயார்க் நகரில் புளூம்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்றுப் பேசும் பிரதமர் மோடி பல்வேறு தொழில் நிறுவனத் தலைவர்களையும் சந்திக்கிறார். அமெரிக்காவில் உள்ள முன்னணி சோலார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யக் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in