Published : 21 Sep 2019 09:37 AM
Last Updated : 21 Sep 2019 09:37 AM

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது

புதுடெல்லி

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலுக்குப் பின் அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இன்று பிற்பகலுக்குப் பின் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த இருப்பதால், தேர்தல் தேதிகள் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 9-ம் தேதியுடனும், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 2-ம் தேதியுடனும் முடிகிறது.

இந்த இரு மாநிலங்களோடு ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலில் இரு மாநிலங்களின் தேர்தலும் அதன்பின் ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 27-ம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். நீண்டகாலத்துக்குப் பின் தேவேந்திர பட்நாவிஸ் 5ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே தொகுதிகள் பிரிப்பதில் கடைசி நேரம் வரை இழுபறி நீடித்தது. பாஜகவுக்கு 120 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று சிவசேனா கூறியது. ஆனால், பாஜக அதற்கு சம்மதிக்கவில்லை. கடைசி நேரத்தில் 25 ஆண்டுகள் கூட்டணியை உடைத்து இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன.

கடந்த தேர்தலில் சிவசேனா 282 இடங்களில் போட்டியிட்டு 63 இடங்களையும், பாஜக 260 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களையும் வென்றன. மற்ற கட்சிகளின் ஆதரவுடனும், சிவசேனா வெளியில் இருந்து அளித்த ஆதரவால் பாஜக ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகளைப் பிரிப்பதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்துவரும் சில நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் அறிவிக்கும் எனத் தெரிகிறது.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவும், சிவசேனாவும் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. தேவந்திர பட்நாவிஸ், மகா ஜன் ஆதேஷ் யாத்திரையைத் தொடங்கி மாநிலம் முழுவதும் பயணித்து மக்களைச் சந்தித்துள்ளார். ஆதலால், இந்த முறை தேர்தலில் பாஜக, சிவசேனா இடையே கூட்டணி குறித்தும், எத்தனை இடங்களில் இரு கட்சிகளும் போட்டியிடும் என்பதும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது

ஹரியாணா மாநிலத்தில் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இவரும் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு கடந்த முறை ஆட்சியைப் பிடித்த பாஜக, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க கடுமையாகப் போராடும் எனத் தெரிகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x