Published : 21 Sep 2019 09:19 AM
Last Updated : 21 Sep 2019 09:19 AM

தே.ஜ. கூட்டணிக்குள் பிளவு இல்லை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டம்

பாட்னா

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் (என்டிஏ) பிளவு இல்லை. அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள பேரவை தேர்தலில் என்டிஏ 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

பிஹாரில் ஐக்கிய ஐனதா தளம் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவரும் மாநில முதல்வருமான நிதிஷ் குமார் பேசியதாவது:

எதிர்க்கட்சியினர் அரசியல் ஞானமின்றி தங்களுக்கு விளம் பரம் கிடைப்பதற்காக என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களில் பலர் பிறகு தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இதை விட்டால் பேசு வதற்கு வேறு ஒன்றும் இல்லை என ஒப்புக்கொள்கின்றனர்.

இவர்களுக்கு பதில் சொல்வதை நாம் தவிர்க்க வேண்டும். எனக்கு எதிரான ஒவ்வொரு அவதூறு கருத்துக்கும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதில் சொல்ல வேண்டாம். பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி யாக தெரிவித்தால் போதுமானது.

2010 சட்டப்பேரவை தேர்தலில் நாம் பெரும்பான்மை பெறுவது சந்தேகமே என்றனர். ஆனால் மொத்தமுள்ள 243 இடங்களில் 206 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தலை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் என்டிஏ வெற்றி பெறும்.

ஐக்கிய ஜனதா தளம் பாஜக இடையே சுமூக உறவு நிலவுகிறது. பிஹாரில் என்டிஏ கூட்டணிக்குள் பிரச்சினை இருப்பதாக பலர் நினைக்கின்றனர். எங்களுக்குள் அவ்வாறு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் பிரச்சினையில் சிக்குவார்கள்.

இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் நிதிஷ்குமாரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பிஹாரில் கடந்த 2005-ல் நடந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி தோற்கடித்தது. அப்போது முதல், நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகிக்கிறார்.

2013-ல் பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார் தனது அரசியல் எதிரியான லாலு மற்றும் காங்கிரஸுடன் மகா கூட்டணி அமைத்தார். 2015 தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. என்றாலும் 2017-ல் நிதிஷ் மீண்டும் என்டிஏ-வுக்குத் திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x