

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டப்படிப்பு மாணவி மீது சின்மயனந்த் ஏற்கெனவே தொடுத்துள்ள புகாரில் பணம் பறிக்க முயன்றதாக அந்த மாணவி மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக சிறப்பு விசாரணை அதிகாரி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சின்மயானந்த் கைதானதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்ட செய்தியாளர்கள் குறிப்பில் பணம்பறிப்புக் குற்றச்சாட்டில் எஃப்.ஐ.ஆர். பதிவில் அந்த மாணவியின் பெயர் 4வதாக இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பியிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச்சாட்டில் அந்த மாணவிக்குத் தொடர்புடைய 3 பிற நபர்களையும் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளது.
சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் நவீன் அரோரா ஷாஜகான்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் சின்மயானந்த் மீது பாலியல் புகார் சுமத்திய பெண் பணம்பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என்றார்.
“முதற்கட்ட விசாரணையில் அவர் பணம்பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது, விசாரணை இன்னும் இது தொடர்பாக நடைபெற்று வருகிறது” என்றார் அரோரா.
இதுதொடர்பாக அந்த சட்ட மாணவிக்கும் அவருடன் தொடர்புடைய சஞ்சய் சிங் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டில் சுமார் 4200 தொலைபேசி அழைப்புகள் பதிவாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில் அந்தச் சட்ட மாணவிக்கும் சின்மயானந்திற்கும் இடையே சுமார் 200 தொலைபேசி அழைப்புகள் பதிவாகியுள்ளன என்று சிறப்பு விசாரணை அதிகாரி அரோரா தெரிவித்தார்.