

கொல்கத்தா, பிடிஐ
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், அவரின் தலைமுடியை இழுத்துத் தாக்குதல் நடத்தி கெரோ செய்தனர். இதையடுத்து, ஆளுநர் ஜெகதீப் தனகர் அங்குவந்து அவரை போலீஸார் உதவியுடன் மீட்டுச் சென்ற சம்பவத்தையடுத்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ காரில் இருந்து இறங்கி வந்து மாணவர்களுடன் நேரடியாக வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதனால் மாணவர்களுக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. அப்போது மாணவர்களில் ஒருதரப்பினர் ஆத்திரத்தில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவைப் பிடித்துத் தள்ளினர். தலைமுடியைப் பிடித்து, தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், ஜாதவ்பூர் பல்கலைக் கழக வளாகம் தேச விரோதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்களால் சூழப்பட்டுள்ளது. இதனை நம் தொண்டர்கள் பாலகோட் பாணி துல்லியத் தாக்குதல் நடத்தி முறியடிப்பார்கள்.
“பாபுல் சுப்ரியோவை அவர்கள் கொலை செய்யும் வரை திரிணமூல் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான் அங்கு உள்ளது. ஆளுநர் ஜக்தீப் தந்த்கர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்ததால் பிரச்சினை இத்தோடு நின்றது.
ஜாதவ்பூர் பல்கலைக் கழக வளாகம் தேச விரோதிகளாலும் கம்யூனிஸ்ட்களாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு முதல் முறையாக இது நடக்கவில்லை. பாகிஸ்தான் பகுதியில் நம் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதக் குழுக்களை அழிக்க சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது போல் நம் தொண்டர்களும் இதே போன்ற துல்லியத் தாக்குதலை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் திலிப் கோஷ் ஆவேசமாகப் பேசினார்.
மேலும் அவர் ஜாதவ்பூர் பல்கலைக் கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.