Published : 20 Sep 2019 05:26 PM
Last Updated : 20 Sep 2019 05:26 PM

உ.பி.யில் என்.ஆர்.சி கொண்டு வந்தால் யோகி ஆதித்யநாத் வெளியேற வேண்டியிருக்கும்: அகிலேஷ் யாதவ் பேட்டி

அகிலேஷ் யாதவ்

லக்னோ,

உ.பி.யில் என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால், யோகி ஆதித்யநாத் தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்று அகிலேஷ் யாதவ் இன்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 19 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட உள்ளதாக வடகிழக்கு மாநிலங்களும் அறிவித்தன.

நேற்று ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ''விரைவில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியர்கள் சென்று சட்டவிரோதமாக வசிக்க முடியுமா? அப்படி இருக்கும்போது இந்தியாவில் மட்டும் வெளிநாடுகளின் மக்கள் எப்படி சட்ட விரோதமாக வசிக்க முடியும்? ஆகவே தான் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்'' என்று பேசியிருந்தார்.

இதனை ஆதரித்துப் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ''தேவைப்பட்டால் உத்தரப் பிரதேசத்திலும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும்'' என்று கூறினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சிற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் லக்னோவில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''உத்தரப் பிரதேசத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவருவது தேவையற்ற ஒன்று. இது மக்களைப் பிளவுபடுத்தும்.

ஒருவேளை உத்தரப் பிரதேசத்தில் என்.ஆர்.சி. கொண்டுவந்தால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டிற்கு திரும்பிச் செல்லவேண்டியிருக்கும். ஏனெனில் உத்தரகாண்டை பூர்வீகமாகக் கொண்டவர் அவர்.

இந்திய அரசியலில் என்.ஆர்.சி என்பது அச்சத்தைத் தூண்டும் ஒரு காரணி என பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, என்ஆர்சியை வைத்துக்கொண்டு பிரித்தாளும்வேலைகளைச் செய்தார்கள். இப்போது அதை வைத்துக்கொண்டு பயத்தின் அரசியலை இவர்கள் செய்கிறார்கள்.

ஒருகாலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியில் பிளவுபடுத்தும் சக்திகளாக செயல்பட்டவர்களை நாம் வெளியேற்றினோம். இப்போது, தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவருவதாகக் கூறி மக்களிடையே பயத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அச்சமூட்டும் இவர்களை அரசாங்கத்தை விட்டு வெளியேற வைப்போம் என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம்'' என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x