

கனமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை 2 நாட்களுக்குப் பிறகு நேற்று ஜம்முவில் இருந்து தொடங்கியது.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப் பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்கு பிறகு நேற்று முதல் இச்சாலையில் வாக னங்கள் அனுமதிக்கப் பட்டன.
இந்நிலையில் ஜம்மு பகவதி நகர் முகாமில் இருந்து 4,633 யாத்ரீகர்கள் கொண்ட புதிய குழு நேற்று காலை 4.45 மணிக்கு அமர்நாத் புறப்பட்டது.
பலத்த பாதுகாப்புடன் புறப்பட்ட இக்குழுவில் 3,302 ஆண்கள், 1,012 பெண்கள், 80 குழந்தைகள், 238 சாதுக்கள் மற்றும் ஒருவர் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று மாலை பல்தல் மற்றும் பஹல்காம் அடிவார முகாம்களை சென்றடைந்தனர். நேற்று புறப்பட்ட குழுவுடன் ஜம்மு முகாமில் இருந்து இதுவரை 27,098 யாத்ரீகர்கள் அமர்நாத் சென்றுள்ளனர். அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 1.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.