Published : 20 Sep 2019 04:36 PM
Last Updated : 20 Sep 2019 04:36 PM

எதிரிகளின் ரசாயனத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் பயிற்சி தேவை: ராஜ்நாத் சிங்

குவாலியர்

எதிர்காலத்தில் ரசாயன உயிரியல் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான போதிய பயிற்சியும் ஆயுதங்களையும் ஆயுதப்படைகள் பெற்றிருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.

குவாலியரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஇ) நடைபெற்ற விழா ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

இந்த நிறுவனத்தில் சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு மற்றும் சர்வதேச அமைப்பின் உயிர் மருத்துவ மாதிரிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆய்வகம் அமைந்துள்ளது. ஒரு தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைக்குத் தேவையான ரசாயனக் கருவிகளை வழங்கி வருகிறது.

டிஆர்டிஇ தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

"உயிரியல் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் வாழ்க்கை, சுகாதாரம், சொத்து மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்தையும் பாதிக்கக்கூடும். மீண்டும் அவற்றையெல்லாம் நாம் மீட்க வேண்டுமெனில் மிக நீண்டகாலம் ஆகும்.

ஆனால் நம் இந்திய ராணுவப் படைகளை நிறுத்தும் பல பிராந்தியங்களில், தாக்கவரும் எதிரிகள் ஒருவேளை உயிரியல் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும். இதை எதிர்கொள்ள நம்மிடமும் அதற்கான ஆயுதங்கள் இருக்க வேண்டும். உயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் நமது ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை.

இந்த நிறுவனத்தின் உயிரியல் ரசாயனஅடிப்படையிலான பல தயாரிப்புகள் நமது ராணுவத்தின் ஆயுதப் படைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் பாராட்டத்தக்கது''.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x