Published : 20 Sep 2019 03:36 PM
Last Updated : 20 Sep 2019 03:36 PM

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை இனி ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பனாஜி

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை இனிமேல் சிறப்புத்தன்மை வாய்ந்த அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் ஆகியவற்றின் ஆய்வுகள், மேம்பாட்டுக்குச் செலவு செய்ய முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, ரூ.500 கோடி நிகர மதிப்புகொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள், தங்களது முந்தைய 3 ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் 2 சதவீதத்தை சமூக நடவடிக்கைகளுக்கு (Corporate Social Responsibility - CSR) செலவு செய்ய வேண்டும்.

இந்தச் சட்டம் 2014 ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டது. சமூகப் பங்களிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை நிறுவனங்கள் நேரடியாக செலவு செய்யலாம் அல்லது தங்களது சொந்த அறக்கட்டளை மூலமாகவும், லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவும் செலவு செய்யலாம்.

மேலும் சமூகத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைச் சீரமைத்து அவர்களை சமூகத்தில் மதிப்புடன் வாழ இந்த நிதி துணைபுரிந்தது. கல்வி, குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், சமூகத்தை மேம்படுத்துதல், குழந்தைகள் நலன், இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவு செய்தன.

ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த தொழில் சலுகைகளில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை ஆய்வுப்பணிகளுக்கும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் 2 சதவீதத்தை இனிமேல் என்ஐடி, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் ஆய்வு பணிக்கும் செலவிடலாம். குறிப்பாக அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவற்றில் நடக்கும் ஆய்வுகள், மேம்பாட்டுக்குச் செலவிடலாம்.

மத்திய அரசு, மாநில அரசு, அரசின் எந்த அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் இயங்கும் நிறுவனங்களின் ஆய்வுப் பணி, மேம்பாட்டுக்கும் செலவிடலாம். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆய்வுப் பணிகள், ஐஐடிகள், சுயாட்சி அங்கீகாரம் பெற்ற தேசிய ஆய்வுக்கூட்டம் ஆகியவற்றுக்குச் செலவிடலாம்.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு ஏராளமாகச் செலவிட இருக்கிறது. ஆனால், இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியும் செல்லும்போது ஆய்வுகள், மேம்பாட்டுப் பணிகள் ஊக்கமடையும்’’.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


ஐஏஎன்எல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x