

புதுடெல்லி,
அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான வரி 30%லிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 25% ஆக இருந்த வரி 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது 30 சதவீதம் இருந்த கார்ப்பரேட் வரி 22% ஆகக் குறைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவை சேர்த்து கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு பலதரப்பிலும் பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில், ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25.17% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் வருமானவரிச் சட்டத்தின் கீழ் செலுத்தப்படும் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) என்பது 18.5%-லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய நிறுவனங்கள் 17.01% வரை கார்ப்பரேட் வரி செலுத்தினால் போதும், 2023-ம் ஆண்டு வரை இந்தச் சலுகைகளை நிறுவனங்கள் பெறலாம்.
இது குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுத் தெரிவிக்கும் போது , கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவமானது. இது மேக் இன் இந்தியாவை சிறந்த வகையில் ஊக்குவிக்கும். உலக அளவில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும். தனியார் துறையில் போட்டிகளை அதிகரிக்கச் செய்து, வளர்ச்சியை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். இதன் முடிவு 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த வரிக்குறைப்பு அறிவிப்பினால் பங்குச்சந்தைகளில் புள்ளிகள் பெரிய அளவில் உயர்ந்துள்ளன.