Published : 20 Sep 2019 03:03 PM
Last Updated : 20 Sep 2019 03:03 PM

சாரதா சிட்பண்ட் மோசடி; போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை: கைது செய்ய சிபிஐ தீவிரம் 

கொல்கத்தா

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் ஆதாரங்களை அழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, ராஜீவ் குமாரைக் கைது செய்யும் முயற்சியில், அதற்கான சட்ட விஷயங்களை சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் இரட்டிப்பு வட்டி தருவதாகக் கூறி ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால், விசாரணை முறையாக நடக்கவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிஐடி கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார். இந்த வழக்கை விசாரித்த வந்தபோது ஏராளமான ஆவணங்களை அழித்துவிட்டதாகவும், ஆவணங்களை முறையாக ஒப்படைக்கவில்லை என்றும் சிபிஐ குற்றம் சாட்டி ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றது.

ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து கைது செய்யத் தடை ஆணை பெற்று ராஜீவ் குமார் தப்பி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ராஜீவ் குமாரின் மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவரைக் கைது செய்யத் தடையில்லை என்று அறிவித்தது. அதன்பின் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சிபிஐ அதிகாரிகள் மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

தலைமைச் செயலகத்தில் சென்று தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளருக்கு ராஜீவ் குமார் குறித்த நோட்டீஸ் அளித்தபோதிலும் அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதனால், போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரைக் கண்டுபடிக்க தனிப்படையை சிபிஐ அமைத்து தேடி வருகிறது. இந்த சூழலில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சிபிஐ போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்றும் ஆஜராகவில்லை.

இதற்கிடையே ராஜீவ் குமாரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், செல்பேசி எண்களை மாநில போலீல் டிஜிபியிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவரும் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வாரண்ட் கேட்டு நேற்று அலிப்போர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.

ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ராஜீவ் குமாரை கைது செய்யத் தடையில்லை என்று அறிவித்த நிலையில் அவருக்கு வாரண்ட் ஏதும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. இதனால், போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x