Published : 20 Sep 2019 02:01 PM
Last Updated : 20 Sep 2019 02:01 PM

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பாதிக்கப்பட்ட பெண் சொன்ன பிறகே சின்மயானந்தா கைது: பிரியங்கா சாடல்

புதுடெல்லி,

பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறிய பிறகே முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மாயந்தா கைது செய்யப்பட்டுள்ளார் என்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சின்மயானந்த்துக்கு சொந்தமான கல்லூரி ஒன்றில் சட்டம் பயிலும் முதுகலை மாணவியான அந்தப் பெண், முன்னாள் மத்திய அமைச்சரால் ஓர் ஆண்டு பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார். உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு சின்மயானந்தாவிடம் 7 மணிநேர விசாரணை நடைபெற்றது. கல்லூரி முதல்வர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

மாணவியின் குற்றச்சாட்டின்பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சின்மயானந்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

சின்மயானந்தாவை ஷாஜகான்பூரில் உள்ள அவரது இல்லத்தில் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவினர் (எஸ்ஐடி) இன்று காலை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து காவல்படைகள் அவரது வீட்டைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

சின்மயானந்தா கைது செய்யப்பட்டு அவரது இல்லத்திலிருந்து போலீஸார் அழைத்துச் செல்கிறார்கள்

மூத்த போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான காவல் பணியாளர்களின் குழுக்கள் நீதிமன்ற வளாகத்திலும் மருத்துவமனையிலும் நிறுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை அதிகாரிகள் குழுவும் அந்த பகுதியில் ரோந்து சென்று வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சின்மயானந்தா உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் 15 நாள் காவலில் வைக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

"பாஜக அரசாங்கம் மிகவும் இறுகிய மனநிலையில் உள்ளதால், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்தது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறும் நிலைக்கு ஆளான பிறகே சின்மாயானந்தை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளனர். சின்மயானந்த் கைதுக்கு பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளின் வலிமையே காரணம். 'பேட்டி பச்சாவ்' என்பது வெற்று முழக்கங்களில் மட்டும் இல்லை. அது நடைமுறையில் கடைபிடிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை பொதுமக்கள் உறுதி செய்துள்ளனர்"

இவ்வாறு கூறினார் பிரியங்கா காந்தி.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x