

மகாசமுந்த்
யானைகள் தங்கள் பசிக்காக வயல்களை சேதப்படுத்துவதையும் பயிர்களை நாசம் செய்வதையும் தடுப்பதற்காக, சத்தீஸ்கர் மாநில கிராமவாசிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு அருகே யானையின் சிலையை நிறுவியுள்ளனர்.
வனங்களும் மலைகளும் சூழ்ந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயம் செய்வது என்பது கல்லில் நார் உரிக்கும் கதைதான். ஏனெனில் இங்கு யானைகள் அதிக அளவில் இருப்பதால் அவை விவசாய நிலங்களில் புகுந்து தங்கள் பசியை ஆற்றிக்கொள்கின்றன. இதனால் வயல்வெளிகளும் பயிர்களும் முற்றிலும் சேதமடைந்துவிடுகின்றன.
அரசுப் பதிவுகளின்படி, சத்தீஸ்கரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யானைகள் தாக்கி 65க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். அதுமட்டுமின்றி யானைகளுக்கும் மனிதருக்கும் இடையே நடக்கும் மோதலில் 14 யானைகள் உயிரிழந்துள்ளன. மனித உயிரிழப்பு, பயிர் சேதம் மற்றும் சொத்து இழப்பு ஆகியவற்றுக்காக மாநில அரசு ரூ.75 கோடியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கியுள்ளது.
இதைத் தடுப்பதற்காக கடவுள் நம்பிக்கையுள்ள கிராம மக்கள் ஒரு புதுவழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி யானைகள் தங்கள் பசிக்காக வயல்களை சேதப்படுத்துவதைத் தடுக்க கிராமவாசிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு அருகே யானையின் சிலையை நிறுவியுள்ளனர். யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதை இது தடுக்கும் என்ற அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராமமான குக்ராடி கிராமத்தின் உள்ளூர்வாசிகள் சிலை நிறுவுவதற்கான சடங்குகளை முறையாகப் பின்பற்றிய பிறகே யானை சிலைகளை நிறுவுவதாகக் கூறினர். சிலை நிறுவும் முன்பாக ஒரு நாள் முழுக்க கிராமப் பெண்கள் நோன்பு கடைபிடித்தனர். இப்படி யானையின் சிலை நிறுவப்பட்ட பின்னர் தங்கள் பயிர்கள் பாதுகாக்கப்படும் என்று நம்புகின்றனர்.
இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சாஹூ என்பவர் கூறுகையில், ''யானைகளிடமிருந்து எங்கள் பயிர்களைப் பாதுகாக்க விநாயகர் பிரார்த்தனையுடன் சிலையை நிறுவியுள்ளோம். அக்கடவுளின் வடிவமான யானை சிலை எங்கள் கிராமத்தைப் பாதுகாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.
இன்னொரு கிராம வாசி ராதே லால் சின்ஹா கூறுகையில், ''வனத்துறை எவ்வளவோ முயற்சி செய்தும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால் நாங்கள் இந்தச் சிலையை நிறுவிய பின் யானைகள் வருவதில்லை. இது எங்கள் நம்பிக்கையின் விஷயம்'' என்றார்.
கிராம மக்கள் யானை சிலை நிறுவுவதைப் பற்றி வன அதிகாரி மயங்க் பாண்டே கூறுகையில். ''நாங்கள் கிராமவாசிகளின் நம்பிக்கையை மதிக்கிறோம். பயிர்களின் அழிவு அல்லது உயிர் இழப்பு ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்வதுதான் எங்கள் நோக்கம்'' என்றார்.
-ஏஎன்ஐ