Published : 20 Sep 2019 12:37 PM
Last Updated : 20 Sep 2019 12:37 PM

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை மக்கள் அணுகுவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை: அறிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை மக்கள் அணுகுவதில் எந்தவிதமான சிக்கலும், தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிக்கை அளித்துள்ளார் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல ஆர்வலர்கள் இனாக்ஸி கங்குலி, சாந்த் சின்ஹா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில், ''காஷ்மீரில் குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்கள் எளிதாக உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்ஏ போப்டே, எஸ்ஏ நசீர் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தேவைப்பட்டால் நான் காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்திருந்தார்.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்ஏ போப்டே, எஸ்ஏ நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அளித்த அறிக்கையில் மக்கள் எளிதாக உயர் நீதிமன்றத்தை அணுகுவதில் சிக்கல் இருக்கிறது என்ற வாதத்தை அவர் மறுத்துள்ளார். அவ்வாறு அணுகுவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆனால் இந்த மனு குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்துதான். அதுகுறித்து விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, " இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்தவிதான நோட்டீஸும் பிறப்பிக்கக் கூடாது . அவ்வாறு பிறப்பித்தால் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்

இதையடுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, "காஷ்மீரில் சட்டவிரோதமாக குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் சிறார் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு சென்று ஆய்வு செய்து ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x