Published : 20 Sep 2019 10:19 AM
Last Updated : 20 Sep 2019 10:19 AM

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து தாக்கிய கொல்கத்தா மாணவர்கள்: மீட்டுச் சென்ற ஆளுநர்

கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், அவரின் தலைமுடியை இழுத்துத் தாக்குதல் நடத்தி கெரோ செய்தனர். இதையடுத்து, ஆளுநர் ஜெகதீப் தனகர் அங்குவந்து அவரை போலீஸார் உதவியுடன் மீட்டுச் சென்றார்

மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு எஸ்எப்ஐ, ஏஎப்எஸ்யு மற்றும் எப்இடிஎஸ்யு, ஏஐஎஸ்ஏ ஆகிய அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இணையமைச்சர் பபுல் சுப்ரியோவை மாணவர்கள் அழைத்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, பாஜக தலைவர் அக்னிமித்ரா பால் ஆகியோர் சென்றனர். ஆனால், பல்கலைக்கழக வாசலில் பல்வேறு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நின்றுகொண்டு அமைச்சரை பல்கலைக்கழகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

பல்கலைக்கழகத்துக்குள் பாஜக, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. சுதந்திரமான சிந்தனை கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் அவர்களுக்கு அனுமதியில்லை என்று கோரி மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ காரில் இருந்து இறங்கி வந்து மாணவர்களுடன் நேரடியாக வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதனால் மாணவர்களுக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. அப்போது மாணவர்களில் ஒருதரப்பினர் ஆத்திரத்தில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவைப் பிடித்துத் தள்ளினர். தலைமுடியைப் பிடித்து, தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ கூறுகையில், "நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. இங்கு மாணவர்கள் என்னிடம் நடந்துகொண்ட முறை எனக்கு வருத்தம் அளிக்கிறது, என்னிடம் பேசியவிதம், கேள்வி கேட்டது, நடந்துகொண்டது வேதனையளிக்கிறது. என் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தாக்கி, கீழே தள்ளினார்கள்" எனத் தெரிவித்தார்.

இருப்பினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ கருத்தரங்கில் பங்கேற்றார். கருத்தரங்கு முடிந்ததும் அவர் மீண்டும் வெளியே செல்ல முயன்றார். ஆனால் மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு வெளியேவிடாமல் தடுத்தனர்.

இந்த விவகாரம் உடனடியாக போலீஸாருக்கும், ஆளுநருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த ஆளுநர் தனகர் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு மாலை நேரத்தில் வந்து, மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியாவை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் குறித்து ஆளுநர் தனகர் நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய அமைச்சர் ஒருவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தியதும், அவரைத் தாக்கியதும் தீவிரமான விஷயம். இதுகுறித்து தலைமைச் செயலாளர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் விஜய் வர்கியா கூறுகையில், "மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை மாணவர்கள் நடத்திய விதம் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பற்கு உதாரணம். மாநிலத்தில் மத்திய அமைச்சருக்கும், ஆளுநருக்கும் இங்கு பாதுகாப்பில்லை. அப்படி இருக்கும்போது சமானிய மக்களின் நிலையைப் பாருங்கள். திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், போலீஸாரும் இதை நடத்த அனுமதிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x