Published : 19 Sep 2019 08:47 PM
Last Updated : 19 Sep 2019 08:47 PM

உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர் கோயில் விவகாரத்தில் சிவசேனாவுக்கு பிரதமர் மோடி சூசக வேண்டுகோள்

நாசிக், பிடிஐ

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணுங்கள் என்று உரத்தக்குரல்கள் கேட்கப்பட்டு வரும் நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையடுத்து பாஜக இப்போதே பிரச்சார எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் நாசிக்கில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ராமர் கோயில் விவகாரத்தில் சிவசேனா பெயரைக் குறிப்பிடாமல் ‘உரத்தகுரலோர்கள்’ என்று சூசகமாகக் குறிப்பிட்டு, ‘உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

“கடவுளுக்காக, தயவு கூர்ந்து நீதித்துறையை அத்தகையோர் நம்ப வேண்டும் என்று நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். ராமர் கோயில் விவகாரத்தில் உரத்த குரலோர்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

இந்த நாட்டில் ஒவ்வொருவரும் உச்ச நீதிமன்றத்தின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது, எனவே இவர்களிடம் நான் கரம்கூப்பி வேண்டுவதெல்லாம் நீதிஅமைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள் என்பதே” என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்,

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி தைரியம் காட்டிய மோடி ராமர் கோயில் கட்டப்படுவதிலும் அரசு தைரியமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தாங்கள் கடந்த ஆண்டு முதலே கூறிவருகிறோம் ராமர் கோயிலுக்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று, எத்தனை காலம்தான் காத்திருப்பது? என்று திங்களன்று காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், “கோர்ட் உத்தரவுக்காக மத்திய அரசு காத்திருக்காமல் தன் அதிகாரத்தை இதற்காகப் பயன்படுத்த வேண்டும். காஷ்மீருக்குச் செய்தது போல் ராமர் கோயிலுக்கும் செய்ய வேண்டும்” என்றார் உத்தவ் தாக்கரே.

தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிரதமரின் வழியை அடியொட்டி, தாங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x