

நாடாளுமன்றத்தின் வரும் மழைக்கால கூட்டத் தொடரில் புதிய மோட்டார் வாகன மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று கூறும்போது, “சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை வரும் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த மசோதா சட்டமானால், போக்குவரத்து துறையில் வெளிப்படைத் தன்மை ஏற்படுவதுடன் முறைகேடுகள் தடுக்கப்படும்.
நாட்டில் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளை குறைப்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.
அடுத்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளை 50 சதவீதத்துக்கு மேல் குறைப்பதிலும் நாட்டின் மொத்த உற்பத்தியில் சாலை போக்குவரத்து துறையின் பங்களிப்பை 2 சதவீதமாக உயர்த்துவதிலும் எனது அமைச்சகம் உறுதியாக உள்ளது.
நாட்டில் 30 சதவீத ஓட்டுநர் உரிமங்கள் போலி உரிமங்களாக உள்ளன. எனவே கணினி சோதனைகளின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமங்கள் வழங்க நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள் அமைக்க உள்ளோம்.
நாடு முழுவதும் பாதுகாப்பான, ஆற்றல் மிகுந்த, சிக்கனமான, விரைவான போக்குவரத்தை அளிக்கவேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
மாநில அரசுகளின் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை அபகரிக்கும் வகையில் இந்த மசோதாவில் எதுவும் இல்லை. மாநில அரசின் வருவாயில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டோம். உண்மையில் மாநிலங்களுக்கு ஆதரவாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இந்த மசோதா குறித்து சில தவறான கருத்துகள் உள்ளன. இந்த அச்சங்களை போக்கி மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பெற அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.