

புதுடெல்லி
செப்டம்பர் 27-ம் தேதி ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் என வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த விஜய் கோகலே, "வரும் செப்டம்பர் 27-ம் தேதி ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றினார். அதன்பிறகு தற்போது செப்டம்பர் 27-ம் தேதி உரையாற்ற உள்ளார்.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் குளோபல் கோல்கீப்பர்ஸ் (Global GoalKeepers Award) விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்காக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்வச் பாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது" என்றார்.
ஐ.நா. பொதுச் சபையின் 74-வது ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகின்றனர். அதன்படி பிரதமர் மோடி உரையாற்றும் தேதியை வெளியுறவுச் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
கவனம் ஈர்த்துள்ள ஹூஸ்டன் நிகழ்ச்சி..
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வரும் பிரதமர் மோடி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹூஸ்டனில் இந்திய-அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்துள்ள 'ஹவ்டி மோடி' பேரணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்கிறார் என்பது பெருமகிழ்ச்சியளிப்பதாக கோகலே கூறினார்.
தவறை பாகிஸ்தான் உணரும்..
பாகிஸ்தான் வான்வழிப் பாதையில் இந்தியப் பிரதமர் செல்லும் விமானம் பறக்க அந்நாடு தடை விதித்திருப்பது குறித்த கேள்விக்கு, "இது துரதிர்ஷடவசமானது. ஆனால், இதனை ஓர் இயல்பான தேசம் செய்யவில்லை. தான் செய்திருக்கும் தவற்றை நிச்சயம் பாகிஸ்தான் ஒருநாளில் உணரும்" என்றார்.
-ஏஎன்ஐ