Published : 19 Sep 2019 04:26 PM
Last Updated : 19 Sep 2019 04:26 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு அக்.3வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறையில் நாற்காலி கூட இல்லை: வழக்கறிஞர் வாதம்

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் விசாரித்த நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார்.

ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர். சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், " சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை வரும் 30-ம் தேதிவரை நீடிக்க வேண்டும். அவரை சிறைக்கு அனுப்பியதில் இருந்து எந்தவிதமான சூழலும் மாறவில்லை ஆதலால், நீதிமன்றக் காவலை நீட்டிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில் " சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கூடாது. சிதம்பரத்துக்கு முறையான உடல்நலச் சோதனைக்கான மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். சிறையில் அவருக்கு போதுமான அளவு சரிவிகித சத்துணவு இல்லை. 73 வயதான சிதம்பரம் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர். உயர்ரத்த அழுத்தம், நீரிழிவுநோய், உள்ளிட்ட வயதுமூப்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர். சிறையில் இருந்தபோது அவரின் உடல் எடையும் குறைந்துவிட்டது. அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் " என்று வாதிட்டார்

அப்போது மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், "முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தனது சிறை அறைக்கு வெளியே ஒரு நாற்காலியில் வழக்கமாக அமர்ந்துள்ளார். ஆனால் அந்த நாற்காலியையும் சிறை அதிகாரிகள் பறித்துக்கொண்டார்கள். அவருக்கு தலையனைகூட இல்லை. படுக்கையில்தான் அமர்ந்து வருகிறார்" எனத் தெரிவித்தார்

கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிடுகையில், " சட்டத்தில் இருக்கும் வழிகாட்டல்படி, சிதம்பரத்துக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை சிறை அதிகாரிகள் சார்பில் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர் ," ப.சிதம்பரத்துக்கு மருத்துப்பரிசோதனை அளிக்க அனுமதி அளித்து, அவரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீட்டித்து" உத்தரவிட்டார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x