Published : 19 Sep 2019 02:36 PM
Last Updated : 19 Sep 2019 02:36 PM

உ.பி.யில் மாணவர்களுக்கான மதிய உணவில் ஊழல்: 29 பேர் மீது வழக்குப் பதிவு 

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் ஊழல் புரிந்துள்ளதாக 17 அங்கன்வாடி பணியாளர்கள், 4 சிறப்பு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். திட்ட அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உ.பி.யில் சில வாரங்களுக்கு முன் கண்ணாஜ் மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலிருந்து, அரசின் மதிய உணவு வாகனத்தில் ஏராளமான உணவு தானியங்கள் கடத்திச் செல்லப்படுவதை மாவட்ட ஆட்சியரின் ரகசியக் குழு கண்டுபிடித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பரிசோதனை, விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் மெகா ஊழல் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களைத் திருடி மெகா மோசடியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருவதாக இதுவரை சுமார் 29 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளின் இயக்குனர் சத்ருகன் சிங் கூறியுள்ளதாவது:

''உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் ரேபரேலி, கண்ணாஜ், பிரதாப்கர் ஆகிய மாவட்டங்களில்தான் மெகா ஊழல் நடந்துள்ளது. மதிய உணவு (எம்.டி.எம்) திட்டத்திற்காக வழங்கப்படும் தானியங்களைத் திருடி வெளிச்சந்தையில் விற்கும் மெகா மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கிடைத்த அறிக்கையின்படி சிலரிடம் துறைசார் விசாரணை நடத்தப்பட்டது.

துறைசார் விசாரணையைத் தொடர்ந்து, பிரதாப்கரின் ராம்பூர்-சங்கர்கர் மற்றும் ராம்பூர் காஸ் வட்டாரங்களின் மதிய உணவு திட்டத்திற்கான தானியங்கள் சட்டவிரோதமாக ரேபரேலி வர்த்தகருக்கு விற்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சுமார் 155 மூட்டைகளில் (தோராயமாக 9,300 கிலோ) உணவு தானியங்கள் பிரதாப்கர் எனும் நகரிலிருந்து கொண்டு வரப்பட்டு, ரேபரேலியின் சலோன் தொகுதியில் உள்ள தனியார் வியாபாரி ஒருவரின் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதை போலீஸார் கண்டுபிடித்தனர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வெளிச்சந்தையில் ஈடுபட்டு வரும் அந்த மொத்த வியாபாரி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவரது கிடங்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தானிய மூட்டைகளை நேற்று போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மோசடியில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த பிரதாப்கர் மாவட்ட திட்ட அலுவலர் (டிபிஓ) பி கே யாதவுக்கு எதிராகவும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் (சிடிபிஓ) பொறுப்பாளர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள்மீது துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 29 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு சத்ருகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோல், எம்.டி.எம் திட்டத்தின் விநியோகத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 4 சிறப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு தலைமை எழுத்தர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர்களின் உணவில் மெகா ஊழல் நடந்துள்ளது மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு உப்பு மற்றும் ரொட்டி வழங்கப்படுவதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய உள்ளூர் பத்திரிகையாளர் மீது மிர்சாபூர் மாவட்ட அதிகாரிகள் கிரிமினல் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x