காங். தலைவர் சிவகுமார் வழக்கு: கர்நாடக பெண் எம்எல்ஏ அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜர்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கர் : கோப்புப்படம்
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கர் : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் கைதாகி திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் வழக்கு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் பெண் எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கர் அமலாக்கப் பிரிவிடம் நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமாரை அமலாக்கப் பிரிவு கடந்த 3-ம் தேதி கைது செய்தது. அவரை வரும் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே உடல்நலக் குறைவுகாரணமாக டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் சிவகுமார் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கான சிகிச்சை முடிந்து இன்று மீண்டும் திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் அமலாக்கப் பிரிவு 7 மணிநேரம் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிவகுமார் வழக்கில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய காங்கிரஸ் பெண் எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு கடந்த 14-ம் தேதி சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், டெல்லிக்கு வர இயலாது, பெங்களூரில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று லட்சுமி சார்பில் அமலாக்கப் பிரிவுக்கு பதில் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அமலாக்கப் பிரிவு தரப்பில் பதில் ஏதும் இல்லை

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கர் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரி வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு அனுப்புவார் என்று தெரிகிறது.

இந்த விசாரணை குறித்து லட்சுமி ஹெபால்கர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், "அமலாக்கப் பிரிவு அரசியல் பழிவாங்கலுடன் எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in