

புதுடெல்லி
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிராக, தனியார் போக்குவரத்து சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திகின்றன. தனியார் பேருந்து, ஆட்டோ, லாரி, டாக்ஸி, பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
ஓலா, உபேர் போன்ற டாக்ஸி ஓட்டுநர்களும் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து வெகுவாகவே முடங்கியுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி, குர்கான், நொய்டா பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. பல பள்ளிகள் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் திடீர் விடுமுறையைத் தெரியப்படுத்தின.
டெல்லி மெட்ரோ சேவையும், டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளும் மட்டும் வழக்கம்போல் இயங்குகின்றன.
தனியார் விமான நிறுவனங்களான விஸ்தாரா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் ஆகியன தங்களின் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்துக்கு வந்து சேர்வதை திட்டமிட்டு செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
வேலைநிறுத்தம் தொடர்பாக டெல்லி போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஷ்யாமாலால் கோலா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "புதிய மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த 15 நாட்களாகவே நாங்கள் எங்களின் குறைகளைத் தெரிவித்து வருகிறோம். ஆனால் எந்தத் தீர்வும் கிட்டவில்லை. அதனாலேயே இன்று அடையாள வேலைநிறுத்தம் நடத்துகிறோம். அளவுக்கு அதிகமாக அபராதம் விதிப்பதால் போலீஸ் கை ஓங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சில இடங்களில் துன்புறுத்தப்படுகின்றனர். இது லஞ்ச லாவன்யங்களை அதிகரிக்கும்" என்றார்.
செப்டம்பர் 1-ம் தேதி அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி கார் ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்னர் இது ரூ.100-ஆக இருந்தது. வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் ரூ.1000-ல் இருந்து ரூ.5000 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை டெல்லி அரசே அதிகக் கெடுபிடியுடன் அமல் படுத்திவருகிறது. முதன்முதலில் டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்த நிலையில், அதிக அபராதத் தொகை வருமானத்துக்காக அல்ல மக்களை போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கச் செய்யவே என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
மேலும், மாநிலங்கள் விரும்பினால் அபராதத் தொகையை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிடிஐ