

பெங்களூரு
துபாயில் இருந்தவாறே வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் தலாக் சொன்ன கணவர் மீது நடவடிக்கை கோருகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு உடனடியாக தலாக் கூறி அவர்களை ஒதுக்கி வைப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முத்தலாக்கைப் பின்பற்றும் கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கணவனைக் கைது செய்யும் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கணவன் கைது செய்யப்பட்டால், மாஜிஸ்திரேட் முன் மனைவி ஒப்புதலின் பெயரிலேயே ஜாமீன் பெற முடியும். இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்கி தனது கணவர் முஸ்தபா துபாயில் இருந்து கொண்டு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் வாயிலாக முத்தலாக் சொல்லியதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "எனது கணவர் தலாக் கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இந்த விவாகரத்தை ஏற்கவில்லை. போலீஸில் வழக்குப் பதிவு செய்துள்ளேன். எனக்கு நீதி வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக எந்தச் சிக்கலும் இல்லாமலேயே வாழ்ந்தோம்.
ஆரம்பத்தில் எங்களுக்குக் குழந்தை இல்லாத பிரச்சினையைக் கூட அவர் பெரிதாக்கவில்லை. ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தோம். இப்போது திடீரென தலாக் கூறுகிறார். நான் நிறைய படிக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல இயலாது. என் கணவரும் எங்களுக்கு நிதியுதவி செய்வதில்லை. என் மகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தை நான் வரவேற்கிறேன். எனக்கு நீதி கிடைக்க பிதமர் மோடி உதவ வேண்டும்" என ஆயிஷா சித்திக்கி கூறியுள்ளார்.