Published : 19 Sep 2019 11:24 AM
Last Updated : 19 Sep 2019 11:24 AM

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்: பாதிக்குப் பாதி சீட் தராவிட்டால் கூட்டணி முறியும்; சிவசேனா

மும்பை

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுக்கு 50% தொகுதிகளை பாஜக ஒதுக்காவிட்டால் கூட்டணி முறியும் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் எச்சரித்துள்ளார்.

மேலும் அவர், ''அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் எடுக்கப்பட்ட சிவசேனாவுடன் 50 - 50 தொகுதிப் பங்கீடு முடிவை பாஜக மதிக்க வேண்டும். இப்போது நான் தொகுதிப் பங்கீட்டை வலியுறுத்துகிறேனே தவிர கூட்டணி முறிவை வலியுறுத்தவில்லை. ஆனால், திவாகர் ராவ்தே கூறியதையும் மறுப்பதற்கில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா அமைச்சரும் சிவசேனா மூத்த தலைவருமான திவாகர் ராவ்தே, 50% இடங்களை சிவசேனாவுக்கு ஒதுக்காவிட்டால் பாஜகவுடனான தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடையும் எனத் தெரிவித்திருந்தார். அதனை வலியுறுத்தும் வகையில் சஞ்சய் ராவத்தும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஓரணியிலும், ஆளும் பாஜக - சிவசேனா மற்றோர் அணியிலும் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளைப் பங்கீடு செய்து கொள்வதில்தான் பாஜக - சிவசேனா இடையே இழுபறி நிலவுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுமே தனித்தனியாகத்தான் போட்டியிட்டன. பாஜக 123 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், இந்தத் தேர்தலில் சரிபாதி இட ஒதுக்கீடு கோரி சிவசேனா கெடுபிடி காட்டுகிறது. சிவசேனா கெடுபிடி ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா பாஜகவினர் தங்களுக்கே அதிக சீட் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் இழுபறி நீடிக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜக 23 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. சிவசேனா 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனைக் குறிப்பிட்டே மாநில பாஜகவும் அடம் பிடிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் கூட்டணி விவகாரத்தில் இழுபறி நீடிப்பது பாஜக மேலிடத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x