Published : 19 Sep 2019 11:07 AM
Last Updated : 19 Sep 2019 11:07 AM

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு

பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணித்தார்.

இதன் மூலம் தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றார்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், " இந்திய ஏரோநாட்டிகல் லிமிடட் நிறுவன அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார். இந்த விமானப் பயணத்தின் போது, ராஜ்நாத் சிங் விமானிகளுக்கான ஜி சூட் ஆடை அணிந்திருந்தார். ராஜ்நாத் சிங்குடன் விமானப்படை துணைமார்ஷல் என் திவாரி பயணித்தார். இதன்மூலம் தேஜஸ் விமானத்தை இயக்கும் விமானிகளுக்கும் இது ஊக்கமாக அமையும்" எனத் தெரிவித்தார்

இந்தியாவின் மிக்-21 விமானத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட தேஜஸ் விமானம் விமானப்படையிலும், கப்பற்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சூப்பர்சோனிக் விமானமான தேஜஸ், ஒலியின் வேகத்தில் மேக் 1.8 வீதத்தில் அதாவது, மணிக்கு 1,381 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது.

இந்த தேஜஸ் விமானத்தில் இருந்து, வானில் இருந்து வான் இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல், ராக்கெட் வீச்சு, ஏவுகணைத் தாக்குதல், பிரம்மோஸ், அஸ்த்ரா, லேசர் வெடிகுண்டுகள், கொத்து வெடிகுண்டுகள் போன்ற குண்டுகளை வீச முடியும்.

கடந்த வாரம் கோவா மாநிலத்தில் நடந்த பயிற்சியில் தேஜஸ் விமானம், தரையிறங்கும் போது சரியான இடத்தில் நிற்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தேஜஸ் விமானம் சிறப்பாகச் செயல்பட்டது.

இந்திய விமானப் படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் விமானப் படை ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அதற்கான விலையை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வந்தநிலையில் அது சமரசமாக முடிக்கப்பட்டது. இதன் மூலம் விரைவில் 83 தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வர உள்ளன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x