Published : 18 Sep 2019 06:14 PM
Last Updated : 18 Sep 2019 06:14 PM

இந்தி பற்றிய எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: அமித் ஷா விளக்கம்

ராஞ்சி

இந்தி பற்றி நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் பலரும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் மட்டுமல்லாது இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் , ''நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.

எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமில்லை, தென் இந்தியாவில் எந்த மாநில மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் இதற்கு தற்போது அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.ராஞ்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்றால் இந்தி கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் நான் கூறினேன். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்தே வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x