

முசாஃபர்நகர்
அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி சிக்கிக்கொள்ளும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் தற்போது மீண்டும் இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளது அவருக்கு எதிராக பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சாய்னி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிவிட்டு பின்னர் எதையாவது சொல்லி சமாளித்துவிடுவார். இவர் 2013 முசாபர்நகர் கலவரத்தின்போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
ஒரு மாதத்திற்கு முன்புகூட, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதால், இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு அந்த பிராந்தியத்தில் இருந்து தங்களுக்குத் தேவையான மனைவியைத் தேடிக்கொள்ள உதவும் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நிகழ்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் உ.பி.யைச் சேர்ந்த எம்எல்ஏவும் அவரது கட்டாலி தொகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஜவஹர்லால் நேருவைப் பற்றி மிகவும் மோசமான கருத்து ஒன்றைக் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேருவை மட்டுமின்றி அவரது முழு குடும்பத்தையும் 'ஆயாஷ்' என்று உருது வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போதே ஒரு ஆங்கிலப் பெண்ணுடன் நேரு நெருக்கமாக இருந்தார் என்றும் ஒட்டுமொத்தக் குடும்பமே அப்படிப்பட்டதுதான் என்றும் கூறி, ராஜீவ் காந்திகூட இத்தாலியில்தான் திருமணம் செய்துகொண்டார் என்று கூறினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸார் சாய்னியைத் தாக்கி கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
பின்னர், தொலைக்காட்சி சேனல் ஒன்று இன்று இதுகுறித்து சாய்னியிடம், ''இப்படிப் பேசியது சரியா'' கேள்வி எழுப்பியது. அதற்கு விக்ரம் சாய்னி பதிலளித்துப் பேசியபோது ''நேரு பற்றி புத்தகங்களில் படித்ததைத்தான் நான் கூறினேன். நேரு வண்ணமயமான குணாதிசயங்கள்கொண்டவர். அவர் ஓர் ஆங்கிலப் பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தார் என்றுதான் கூறினேன். ஆனால் 'ஆயாஷ்' என்ற உருது வார்த்தையை நான் அழுத்திப் பயன்படுத்தியதால் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். இது மீண்டும் நடக்காது'' என்று பதிலளித்தார்.
உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
- பிடிஐ