

புதுடெல்லி
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்தி அடிப்படையிலான ஊதியத்தை ஊக்கத்தொகையாக (போனஸ்) வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து 6-வது ஆண்டாக உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
தசரா, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 78 நாட்கள் உற்பத்தி சார் ஊக்கத்தொகை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத்தொகை வழங்க இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், " தசரா, தீபாவளிப் பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு மூலம் ரயில்வேயில் 11 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ