Published : 18 Sep 2019 03:55 PM
Last Updated : 18 Sep 2019 03:55 PM

உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் இ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் இ- சிகரெட்டை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் தடை விதித்து கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் அண்மை காலமாக இ- சிகரெட் பிரபலமாகி வருகிறது. சாதாரண சிகரெட்டின் தோற்றத்தில் நீளமான குழாய், அதற்குள் திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் ஒன்று இருக்கும், அதனை வெளியே எடுத்து, அதில் திரவத்தை நிரப்பிக்கொள்ளலாம்.

ஆன் செய்தால் இ-சிகரெட் கருவிக்குள் இருக்கிற மின் சாதனங்கள் அந்தத் திரவத்தை ஆவியாக்கும். அதை வாயில் வைத்து உறிஞ்சினால், கேட்ரிட்ஜிலிருந்து நீராவி வெளிவரும். நாற்றம் இருக்காது.

பேனா, யுஎஸ்பி டிரைவ் போன்ற டிசைன்களில் விற்பனையாகும் இந்த இ-சிகரெட்டுகள் பிரபலமாகின. தொடக்கத்தில் அமோகமான வரவேற்பை பெற்றது. நாளடைவில் இதன் பாதிப்புகள் தெரியவர, உலகின் பல நாடுகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் சில மாநிலங்களிலும் இதற்குத் தடை இருக்கிறது.

இதற்கு தடை விதிக்க மக்களவைத் தேர்தலுக்கு முன்பே மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து இ- சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x