

புதுடெல்லி
மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு, யார் மதவாத சக்திகளை எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு எதிராக செயல்படுவதை காங்கிரஸ் வாடிக்கையாக கொண்டுள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.
200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 100 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். காங்கிரஸ்கட்சிக்கு வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியும் ஆதரவு அளித்து வந்தது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் அசோக் கெலாட் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும் இன்று ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் செயலையும், காங்கிரஸ் கட்சியையும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று கடுமையாகச் சாடினார். ‘‘காங்கிரஸ் கட்சி எப்போதும் டாக்டர் அம்பேத்கருக்கும், அவரின் கொள்கைகளுக்கு விரோதமானது. பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரை காங்கிரஸ் கட்சி சேர்த்துக்கொண்டது நம்பிக்கை துரோகம். காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையற்றது’’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் மாயாவதி மீண்டும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியாவில் மதவாத சக்திகள் தொடர்ந்து வலிமை பெற்று வருகின்றன.
காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடே காரணம். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு, யார் மதவாத சக்திகளை எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு எதிராக செயல்படுவதை காங்கிரஸ் வாடிக்கையாக கொண்டுள்ளது. மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.