Published : 18 Sep 2019 12:29 PM
Last Updated : 18 Sep 2019 12:29 PM

அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு பேச்சுவார்த்தையை தொடரலாம்; அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க இலக்கு: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி
அயோத்தி நில உரிமை வழக்கில் தேவை என்றால் மத்தியஸ்த குழு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரலாம், அதேசமயம் அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க திட்டமிட்டு வருகிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் நீண்டகாலமாக பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி நிலப் பிரச்சினை இருந்து வருகிறது. இதில் ஒருமித்த தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழு வுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார்.

இக்குழுவில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.

அப்போது அயோத்தி நில விவகாரத்தில் சமரச முயற்சி கை கூடவில்லை என மத்தியஸ்தர் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் விசாரித்து விரைவாக முடிக்கப்படும் எனத் தெரிவித்தது.

இதனிடையே மீண்டும் மத்தியஸ்தர் குழுவினர் நடவடிக் கையை தொடங்க வேண்டும் என இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்த மனுவில் ‘‘அயோத்தி பிரச்சினையில் தீர்வு காண மீண்டும் மத்தியஸ்தர் குழு தங்களது முயற்சியை தொடங்க வேண்டும் என்று சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாடா, மூல வர் ராம் லல்லா ஆகிய அமைப்பு கள் விரும்புகின்றன.

இதுதொடர் பாக அந்த அமைப்புகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனவே மத்தியஸ்த பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும். அதேசமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நிறுத்த தேவையில்லை’’ என தெரிவித்தது.

இந்தநிலையில் அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது, இதுதொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியதாவது:

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என மத்தியஸ்த குழு மனு செய்துள்ளது. பல்வேறு அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்தியஸ்த குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதேசமயம் இந்த வழக்கு விசாரணை வேகமாக நடந்து வருகிறது. இதுதொடரும். மத்தியஸ்த முயற்சியை அந்த குழு தொடர விரும்பினால் நிச்சயமாக அதனை தொடரலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி பதவி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x