லலித் மோடி, வியாபம் ஊழல் விவகாரம் எதிரொலி: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

லலித் மோடி, வியாபம் ஊழல் விவகாரம் எதிரொலி: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
Updated on
2 min read

லலித் மோடிக்கு உதவியது மற்றும் மத்தியப் பிரதேச மாநில வியாபம் ஊழல் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியது.

நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், ஐபிஎல் ஊழலில் சிக்கிய லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழலில் சிக்கிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலகாதவரை எந்த ஒரு விவாதமும் நடத்த அனுமதிக்க முடியாது என காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்தன.

நாடாளுமன்ற விதி எண் 267-ன் கீழ் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் குறித்து விவாதம் நடத்தக் கோரி நோட்டீஸ் கொடுத்திருப்பதாக சதீஷ் சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாதி), தபன் குமார் சென் (மார்க்சிஸ்ட்) மற்றும் டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மாயாவதி (பகுஜன் சமாஜ்) பேசும்போது, “நான் பிரதமரானால் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் அதைக் காப்பாற்றவில்லை. வியாபம் ஊழலில் சிக்கிய சவுகான் பதவி விலக வேண்டும்” என்றார்.

சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) பேசும்போது, “பாஜக மூத்த தலைவர் மத்திய அமைச்சராக இருந்தபோது ஜெயின் ஹவாலா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து பதவி விலகினார். அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆன பிறகு மீண்டும் அமைச்சரானார். இதுபோல சர்ச்சையில் சிக்கிய அனைவரும் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ராஜீவ் சுக்லா (காங்கிரஸ்) பேசும்போது, “லலித் மோடி விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்சினை. இதில் தொடர்புடையவர்கள் பதவி விலக வேண்டும்” என்றார்.

இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “சுஷ்மா ஸ்வராஜ் எந்த சட்டப் பிரிவை மீறியுள்ளார் என்பதை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதுகுறித்து விவாதம் நடத்த அரசு இப்போதே தயாராக உள்ளது.

இதுபோல வியாபம் ஊழல் மாநில அரசு சம்பந்தப்பட்டது. இதுகுறித்து இங்கு விவாதிக்க வேண்டுமானால், இமாச்சலப் பிரதேசம், கேரளா, அசாம் மற்றும் கோவா ஆகிய காங்கிரஸ் ஆளும் அல்லது ஆட்சியில் இருந்த மாநிலங்களில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் விவாதிக்க வேண்டியிருக்கும்” என்றார்.

சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்) கூறும்போது, “வியாபம் ஊழல் விவகாரம் ஒரு மாநிலத்துடன் மட்டுமே தொடர்புடையது அல்ல. அதில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதில் சிக்கிய பிற மாநிலத்தவர்களும் மர்மமாக உயிரிழந்துள்ளனர்” என்றார்.

இந்த விவகாரம் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில்…

மக்களவை கூடியதும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து அவையை சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார். பின்னர் 2 மணிக்கு அவை கூடியபோதும் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in