

என்.மகேஷ்குமார்
காகிநாடா
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், இதுவரை 26 பேர் சடலங்களாக மீட்கப்பட் டுள்ளனர். மேலும், காணாமல் போன 24 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இதையடுத்து, அங்கு தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து மாயமானவர் களை தேடி வருகின்றனர். இதில், 26 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 14 சடலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆற்றில் 315 அடி ஆழத்தில் படகு புதைந் திருந்தது நேற்று முன்தினம் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், இதில் சில சடலங்களும் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, படகை மீட்கும் பணியிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 24 பேரை காணவில்லை என்பதால் அவர்களை கண்டறிய வும், மீட்கவும் பேரிடர் மீட்புக் குழுவினர் இரவும் பகலுமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.